Latest News
Home / இலங்கை / கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்

கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்

கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவசியமான மாற்றங்களை உடனடியாக அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கு பயனளிக்கக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பிள்ளைகளை எதிர்காலத்திற்கு கையளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்று (21) பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெற்ற “ரடக் வடினா பொதக்” (நாட்டுக்குப் பெறுமதியான நூல்) 10,000 நூல்களை எழுதும் தேசிய வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் 19 தொற்று காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் பிள்ளைகளின் எழுத்தாற்றல்கள் மற்றும் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னாள் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் ஆலோசனையின்பேரில் கல்வி அமைச்சு மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவணவாக்க சேவைகள் சபை இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

நாட்டின் அனைத்து அரச பாடசாலைகள், பிரிவெனாக்கள், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 01 முதல் 13 வரையான மூன்று வயதெல்லைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் படைப்புகளை முன்வைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 10,000 புத்தகங்கள் இத்திட்டத்தின் நோக்கமாகும். பிரதிகளை கையேற்கும் இறுதி திகதியில் 43,000 அளவில் ஆக்கங்கள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலிருந்தும் கிடைத்துள்ளன.

தெரிவு செய்யப்பட்ட 100 ஆக்கங்களை அச்சிட்டு அரச விருது வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். நாட்டின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு அடையாளமாக ஜனாதிபதியினால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

தேசிய நூலக மற்றும் ஆவணவாக்க சேவைகள் சபையின் தலைவர் சொனால குணவர்தன “ஜாதிக ஜனகதா சங்கிரஹய” தேசிய கிராமிய இலக்கிய சஞ்சிகையின் முதலாவது தொகுதியை ஜனாதிபதிக்கு கையளித்தார்.

பிள்ளைகளை புத்தகங்களின் பக்கம் ஊக்குவித்து நாட்டையும் உலகையும் நேசிக்கின்ற வினைத்திறன்மிக்க பிரஜையாக சமூகமயப்படுத்துவது அவசியமாகும். சிறப்பான கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்ற முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், மின்சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோருடன் கல்வி அமைச்சின் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *