Latest News
Home / இலங்கை / ஐ.நா.வில் இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- வி.உருத்திரகுமாரன்

ஐ.நா.வில் இலங்கை விவாகாரத்தில் இந்தியாவே தலைமை தாங்க வேண்டும்- வி.உருத்திரகுமாரன்

ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பிலான விடயத்தில் இந்தியா தலைமைத்துவம் தாங்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐ.நா.வின் தற்போதைய ஆணையாளர், முன்னாள் ஆணையர்கள், ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள் குறிப்பிட்டதுபோல், இலங்கையைப் பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த இந்திய அரசு துணைபுரிய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு இன்று (திங்கட்கிழமை) வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறிலங்கா தொடர்பாக மேற்குலக நாடுகள் முன்னெடுக்கின்ற தீர்மானத்தில், இந்தியா பார்வையாளராக இல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு நீதியினைப் பெற்றக்கொடுக்க இந்தியாவே தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என எதிர்பார்கிறோம்.

இதேவேளை, இந்தியா முன்வைக்கின்ற 13ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கள இனவாதம் அனுமதிக்காது என்பதோடு, இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியம் தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்பதனை அங்கீகரித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தினைத் தூக்கியெறிந்துள்ள சிங்கள அரசாங்கம், தமிழர்களின் பாரம்பரிய தேசத்தைச் சிதைக்கின்ற வகையில் மேற்கொண்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்களையும், பண்பாட்டு அழிப்பையும் இந்தியா தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.

சிங்களப் பேரினவாதம் தமிழினத்தின் அடையாளத்தை அழித்தும், தாயகத்தைச் சிதைத்தும் மேற்கொண்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலையினைத் தடுத்து நிறுத்தும் தார்மீக் கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தின் தீவுக் கூட்டங்களில் சீனா நிலைகொள்ள முனைவது, ஈழத் தமிழர்களின் இறைமைக்கு முரணாக அமைவது மட்டுமன்றி தமிழகத்தினதும் இந்தியாவினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் அமைகின்றது.

ஒரு நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையில் முக்கிய காரணியாக அமைவது உள்நாட்டு அரசியலாகும். ஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் தமிழகத்தின் வகிபாகம் முக்கியமானதாக அமைய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.

இதற்கு வருகின்ற தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அமைத்துக்கொடுக்கும் என எதிர்பார்கின்றோம். இதனடிப்படையில், சிறிலங்காவை பன்னாட்டு நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை தமிழக கட்சிகள் அனைத்தும், தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

அதனை, அனைத்துக் கட்சிகளும் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டுகின்றோம். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் தலைமையில் சர்வதேசத்தின் மேற்பார்வையில் ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதனையும் தமது தேர்தல் அறிக்கையில் உள்ளடக்க வேண்டுகின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Check Also

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *