Latest News
Home / விளையாட்டு / சதம் விளாசி சாதனை படைத்த சாமரி அத்தபத்து!

சதம் விளாசி சாதனை படைத்த சாமரி அத்தபத்து!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தபத்து சதம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு – 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந் நிலையில் இன்றைய தினம் சிட்னியில் ஆரம்பமான இத் தொடரின் முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களை குவித்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் பெத் மூனி 61 பந்துகளில் 20 நான்கு ஓட்டம் அடங்கலாக 113 ஓட்டத்தையும், அலிசா ஹெலி 21 பந்துகளில்  43 ஓட்டத்தையும், ஆஷ்லீ கார்னர் 27 பந்துகளில் 49 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர்.

இதன் பின்னர் 218 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 41 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

எனினும் இப் போட்டியில் அணியின் வெற்றிக்காக சலைக்காது போராடிய இலங்கை அணியின் தலைவி சாமரி அத்தபத்து அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார்.

இப் போட்டியில் அவர் மொத்தமாக 66 பந்துகளை எதிர்கொண்டு 6 ஆறு ஓட்டம், 12 நான்கு ஓட்டம் அடங்கலாக 113 ஓட்டங்களை குவித்தார்.

இதன் மூலம் மகளிர்க்கான சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் அரங்கில் சதம் விளாசிய முதல் இலங்கை வீராங்கனை என்ற சாதனையை அவர் பதிவுசெய்துள்ளார்.

சாமரி அத்தபத்து கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 178 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *