Latest News
Home / வாழ்வியல் / கோடை உஷ்ணத்திலிருந்து உடலை காத்துக் கொள்ள இதை செய்யலாம்…

கோடை உஷ்ணத்திலிருந்து உடலை காத்துக் கொள்ள இதை செய்யலாம்…

கோடையில் உஷ்ணமும், வறட்சியும் உடலை கஷ்டப்படுத்தும். சுற்றுப்புறமும் சூடாக இருப்பதால் உடலில் ஈரப்பதம் குறைந்துவிடும். இதனால் சோர்வு, உடல்வலி, தலை, கால் வலி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் தோன்றலாம். வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் தவிர்த்து, மற்றவை திரவ பானங்களாக இருந்தால் மிகவும் நல்லது. வெயிலால் உடலில் பொட்டாசியம் சத்து குறைந்து விடும். இதுதான் சோர்வு, வறட்சிக்கு காரணமாகிறது. இளநீர், மோர் மற்றும் பானகம், கரும்புச்சாறு போன்றவற்றை பருகுவதால் பொட்டாசியம் இழப்பை ஈடுகட்டலாம்.

தமிழகத்தில் கோடைகாலத்தில் நீர்மோர், பானகம் போன்றவை முக்கியமாக பருகப்படுகின்றன. பானகத்தில் புளி, பனை வெல்லம், சுக்கு எல்லாம் கலந்து தருவார்கள். இது தாது உப்புகளை துரிதமாக சீர்செய்யும் சக்தி கொண்டது. மோரில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும். அதில் பொட்டாசியம், கால்சியம், லேக்டிக் அமிலம் இருப்பதால் வெயில் காலத்தில் ஏற்படும் தாதுக்களை ஈடுகட்டும்.

வெயில் காலத்தில் குளிர்ச்சிக்காக ‘கூல்டிரிங்ஸ்’ குடிப்பது நல்லதல்ல. அவை ஜீரண சக்தியை குறைக்கும் தன்மை கொண்டவை. குடித்த உடன் குளிர்ச்சி கிடைப்பதுபோல இருந்தாலும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும்.

கோடையில் கண்நோய்களும் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. எனவே வெளியில் சென்று வந்தவுடன் முகம் மற்றும் கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். கோடைகாலத்தில் பகல் பொழுது நீண்டும், இரவுப் பொழுது குறைவாகவும் இருக்கும். எனவே பகலிலும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால் தப்பில்லை. வெயில் காலத்தில் அதிக உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

மண்பானைத் தண்ணீரில் நன்னாரி, விலாமிச்சை வேர், வெட்டிவேர், சந்தனத்தூள் கலந்து பருகி வந்தால் உஷ்ணம் உடலில் ஏறாது. சிலருக்கு வெப்பம் தாங்காமல் பித்தம் அதிகரிக்கும். இந்த உஷ்ண பித்தத்தை தணிக்க தர்ப்பூசணி, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சாப்பிடலாம்.

சிலருக்கு இந்தக் காலத்தில் சிறுநீர் கடுத்துப்போகும். இந்த சிறுநீர் சுருக்கத்திற்கு கொத்தமல்லி மற்றும் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். குளிக்கும்போது குளிர்ச்சிக்காக சந்தனாதி தைலம் தேய்த்து குளிக்கலாம். பூலாங்கிழங்கு, வெட்டிவேர், கார்போக அரிசி, சந்தனம், ரோஜா இதழ், காய்ந்த எலுமிச்சைப்பழத் தோல், பச்சைப்பயிறு ஆகியவற்றை அரைத்து அந்த மாவை தேய்த்து குளித்தால் சருமத்தில் வறட்சி ஏற்படாது. குழம்புகளில் பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை தினமும் சேர்த்துக்கொள்ளலாம். காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *