Latest News
Home / வாழ்வியல் / குழந்தைகளின் அமைதிக்கு பின்னால் உள்ள அதிர்ச்சிகள்!

குழந்தைகளின் அமைதிக்கு பின்னால் உள்ள அதிர்ச்சிகள்!

எங்கள் குழந்தைகள் இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு அமைதியாக இருக்கும்’ என்று ஆனந்தமாக சொல்லும் பெற்றோர், ஒரு விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகள் என்றாலே அவை சுட்டித்தனத்தோடு வளர்வதுதான் இயல்பு. குழந்தைகள் சுட்டித்தனம் செய்தால்தான் அவைகளின் வளர்ச்சி இயல்பாக இருக்கிறது என்று அர்த்தம். அப்படி சுட்டித்தனம் செய்யாமல் மகா அமைதியாக இருக்கும் குழந்தைகளின் மனோவளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் போதுமான அளவு இருக்கிறதா என்று கண்காணிக்கவேண்டும்.

பொதுவாகவே பிரச்சினைக்குரிய குடும்ப சூழலில் வளரும் குழந்தைகளின் மனோவளர்ச்சி அவ்வளவு சிறப்பாக இருக்காது. குழந்தைக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். குழந்தையை எதிரில் வைத்துக் கொண்டு பெற்றோர் வாக்குவாதம் செய்வது, சண்டை போடுவது இவையெல்லாம் குழந்தையின் மன நிலையை பாதித்து, குழந்தையை இயல்புக்கு மாறாக அமைதியாக்கி விடும். குழந்தைகள் குறும்புத்தனங்கள் செய்து, மகிழ்ச்சியாக வளர அவைகளின் குடும்பசூழல் நன்றாக இருக்கவேண்டும். அது பெற்றோரின் கையில்தான் இருக்கிறது.

தனிமை குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. அளவு கடந்த தனிமை குழந்தைகளை அமைதியாக்கி விடும். குழந்தைகள் பேசவும், பழகவும், சிந்திக்கவும் கற்றுக் கொள்வது மற்றவர்களை பார்த்துதான். யாருமே இல்லாத தனிமையில் அவர்கள் வெறுமையை உணர்வார்கள். அந்த வெறுமையின் அழுத்தம் அவர்களை மவுனமாக்கிவிடும். இந்த வகை அமைதி அவைகளின் அறிவு வளர்ச்சி, செயல்திறனை பாதிக்கும். அதனால் குழந்தைகளை மற்றவர்களோடு சேர்ந்து கலகலப்பாக வாழ பழக்குங்கள்.

அதிகமான கண்டிப்பும் குழந்தைகளை அமைதியாக்கி, மூலையில் முடக்கிவிடும். கண்டிப்பதாக நினைத்துக்கொண்டு மற்ற குழந்தைகள் முன்வைத்து அவர்களை திட்டுவதோ அவமதிப்பதோ கூடாது. ஏன்என்றால் குழந்தைகளால் அவமானங்களை தாங்கிக்கொள்ள முடியாது. குழந்தைகளை மற்றவர்கள் முன்னால் வைத்து குற்றஞ்சாட்டினால் அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நினைப்பது தவறு. அதனால் எதிர் விளைவுகள் தான் ஏற்படும். தன்னை யாராவது அவமானப்படுத்தினால் சில குழந்தைகள் எதிர்த்துப் பேசும். எதிர்த்துப் பேசும் துணிச்சலற்ற குழந்தைகள் தங்கள் எதிர்ப்பை அமைதி மூலம் தெரிவிக்கும். இத்தகைய அமைதியை தொடரும் குழந்தைகள், எதிர்காலத்தில் சமூகத்தின் மீது வெறுப்புள்ளவர்களாக மாறிவிடுவார்கள்.

தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளையும் குழந்தைகளால் விளக்கிச் சொல்ல முடியாது. ஏதோ ஒரு அசவுகரியம் என்பது மட்டுமே குழந்தைகளுக்கு புரியும். அதை வெளிப்படுத்த முடியாமல் இயல்புக்கு மாறாக அவை அமைதிகாக்கும். அந்த மவுனத்திற்கான காரணத்தை புரிந்து கொள்ளாமல் அவர்களை வெளியே அழைத்துச் செல்வது, உற்சாகப்படுத்த முயற்சி செய்வது எல்லாம் வீண். குழந்தைகளிடம் அன்பாக விசாரித்து அமைதிக்கான காரணத்தை கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை பெறசெய்யவேண்டும்.

தன்னை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் குழந்தைகளின் மனதை பாதிக்கும். தனக்கு ஏற்பட்ட பாதிப்பை மற்றவர்களுடன் எப்படி பகிர்ந்துகொள்வது என தெரியாமல் குழந்தைகள் அமைதிகாக்கும். அது பாலியல்ரீதியான பாதிப்பாககூட இருக்கலாம். குழந்தைகள் தங்கள் நண்பர்களோடு ஆர்வமாக விளையாடுவார்கள். அவர்களுக்குள் அவ்வப்போது சண்டையும் ஏற்படும். சண்டையில் மனதளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் அதை பெற்றோரிடம் சொன்னால் மீண்டும் விளையாட அனுப்பமாட்டார்கள் என்று பயந்தும் அமைதியாகிவிடுவதுண்டு. விளையாட்டில் ஏற்படும் தோல்வி, பின்னடைவு, மற்ற குழந்தைகளின் கேலி, கிண்டல் போன்றவைகளும் குழந்தைகளை மவுனமாக்கிவிடும்.

விவரம் தெரி்ந்த மனிதர்கள் அமைதியாக இருப்பது ஒரு அற்புதமான விஷயம். அமைதி என்பது மனிதனை பண்படுத்தும் ஞானம். ஆனால் அறியாப்பருவ குழந்தைகளுக்கு அமைதி என்பது பல்வேறு மனப் போராட்டங்களால் ஏற்படும் அவஸ்தை. ஒவ்வொரு அமைதிக்கு பின்னும் பல ஆழ்ந்த காரணம் அடங்கி இருக்கும். அவை அனைத்துமே அவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதனால் குழந்தைகளின் அமைதியை அலட்சியப்படுத்தாமல், அவர்களுடன் பேசி, தெளிவுப்படுத்தி அமைதி என்ற இருளில் இருந்து அவர்களை கலகலப்பான வெளிச்சத்திற்குள் கொண்டு வந்துவிடவேண்டும்.

குழந்தைகள் தங்களுக்கு தேவையான முக்கியத்துவம் கிடைக்காவிட்டாலும் அமைதியாகிவிடுவார்கள். அவைகளின் ஆசைகள், விருப்பங்களையும் அலட்சியம் செய்யக் கூடாது. பெற்றோர்கள் தங்களது சவுகரிய, அசவுகரியங்களை தள்ளி வைத்து விட்டு குழந்தைகளின் ஆசைகளை பூர்த்திசெய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகளை அலட்சியப்படுத்தினால் அவர்களுடைய நம்பிக்கை வட்டத்திலிருந்து பெற்றோர்கள் வெளியே வந்துவிடக்கூடும். அலட்சியத்திற்குள்ளாகும் குழந்தைகள் பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்க மவுனமாகிவிடுவார்கள். மவுனம் அவர்களிடம் அதிக நாட்கள் இருக்கக்கூடாத தேவையற்ற ஆயுதமாகும்.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *