Latest News
Home / கல்வி / இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (The Open University of Sri Lanka) அனைவரும் அறிய வேண்டியமுக்கியமான அம்சங்கள்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் (The Open University of Sri Lanka) அனைவரும் அறிய வேண்டியமுக்கியமான அம்சங்கள்.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகம் கிடைக்காததனால் மாணவர்கள் மொத்தமாகவே கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர். பல்கலைக்கழகம் மட்டுமே உயர் கல்விக்கான நிறுவனம் அல்ல. அதையும் தாண்டி உயர் கல்விக்கான வாய்ப்புகள் அனேகம் உள்ளன. க.பொ.த. உயர் தரத்தில் தோற்றி சித்தியடையும் மாணவர்களில் சுமார் நான்கு வீதமானோரே பல்கலைக்கழக அனுமதி பெறுகின்றனர். 96 வீதமானோர் பல்கலைக்கழக வாசல்கள் வரை சென்று திரும்பு கின்றனர்.

இத்தகைய மாணவர்கள் தமது எதிர்காலம் குறித்து அச்சப்படுகின்றனர். ஆனால், அவர்கள் அச்சப்படுவற்கு ஒன்றுமில்லை. தத்தமது திறமைகளை வளர்த்துக் கொண்டு போட்டித் தன்மையுள்ள தொழிற்சந்தைக்கு தம்மை தயார்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் ஒரு நிறுவனமாக இலங்கை திறந்த பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது.

நாட்டிலுள்ள 14 பல்கலைக்கழ கங்களில் இல்லாத பல வாய்ப்புகள் திறந்த பல்கலைக்கழகத்தில் கிடைக்கின்றன. இதன் கற்கைநெறிகள் 600கும் மேல் உள்ளமை பலருக்குத் தெரியாது. குறிப்பாக நிறுவன ரீதியான வழிகாட்டல்கள் இல்லாத மாணவர்கள் திறந்த பல்கலைக்கழகம் குறித்து எவ்வகை மனப்பாங்கை கொண்டுள்ளனர் என்பது தெரியவில்லை. இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நுகேகொட, நாவல வீதியில் சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஏனைய பல்கலைக் கழகங்களை விட இது முற்றிலும் வித்தியாசமானது. 14 பல்கலைக்கழ கங்களிலும் அனுமதி பெறாத மாணவர்கள் பல்லாயிரக் கணக்கானோர் இங்கு தமது உயர் கல்வியைப் பெற்றுவருகின்றனர்.

இப்பல்கலைக்கழகம் வழங்கும் கற்கைநெறிகளை அறிமுகப்படுத்த முன்னர் இது பற்றிய சில அடிப்படைத் தகவல்களை முன்வைப்பது பொருத்தமானது. 1978ம் ஆண்டின் 16ம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தின் படி 1980ம் ஆண்டு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டிலுள்ள ஏனைய 14 பல்கலைக்கழகங்களில் சான்றிதழ்களுக்கு சமமான அங்கீகாரத்தை இது பெற்றுள்ளது. கற்பித்தலிலும் சில வேறுபாடுகளை அவதானிக்கலாம். வகுப்பறை விரிவுரைகளுக்கு மேலதிகமாக தொலைக்கல்வி முறையிலும் மாணவர்களுக்கு விரிவான அறிவை வழங்கிவருகின்றது. இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட 15 பல்கலைக்கழகங்களில் ஒன்று எனவும் இதனைக் கருதலாம்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒப்படைகள், மாணவர்களது சுய தேடல் முயற்சிகளால் மேற்கொள்ளப்படுகின்ற விடயங்கள், மற்றும் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள் என்பன விரிவான, வினைத்திறனுள்ள கற்றலை உறுதி செய்கின்றன. திறந்த பல்கலைக்கழத்தில் பதிவுசெய்துகொண்ட மாணவர்கள் எவ்வித சட்ட ரீதியான தடைகளுமின்றி ஒரே நேரத்தில் அல்லது சமகாலத்தில் ஏனைய அரச பல்கலைக்கழகங்களில் வேறு கற்கை நெறிகளையும் தொடர்வதற்கு அனுமதியுள்ளது.

திறந்த பல்கலைக்கழகத்திற்கு என்றே உரித்தான கற்றல்-கற்பித்தல் முறைகள் மாணவர்களின் பல்கலைக்கழகக் கனவை நனவாக்கும் ஆற்றல் உள்ளவை. 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு இலங்கைப் பிரஜையும் தம்மை இப்பல்கலைக் கழகத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். (தற்போது வெளிநாட்டவர்களுக்கும் இடம் ஒதுக்கப்படுகின்றது.) திறந்த என்ற பதம் கற்றலுக்கு விரிந்த சாதகத் தன்மையை பிரதி பலிக்கின்றது. வயது கட்டுப்பாடுகள் ஏதுமின்றி நேரடியாகவோ தொலைக்கல்வி முறையிலோ அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பை அது தருகின்றது.

* தமது விருப்பத்திற்கு ஏற்ப, தமது தேவைகளுக்கு ஏற்ப பாடங்களைத் தெரிவுசெய்து கொண்டு கற்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.

* மாணவர்கள் தமது தொழிலைச் செய்துகொண்டே கல்வி நடவடிக்கைகளிலும் எவ்விதத் தடையுமின்றி மேற்கொள்ளலாம். பகுதிநேர கற்கை நெறிகள் இதற்கு உதவுகின்றன. இதனால் கற்றலுக்குத் தடையாகவுள்ள பொருளாதார சுமைகள் நீக்கப்படுகின்றன.

* தொலைக்கல்வி முறையினால் தற்செயலாக விரிவுரைகளுக்கு சமூகம் தரமுடியாமல் போனாலும் வீட்டிலிருந்தே மேலதிக நேரம் ஒதுக்கி கற்கலாம்.

* எமது தேவைகளுக்கு ஏற்ப கற்கைநெறிக்காக கால எல்லைகளையும் நாமே தீர்மானிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. உதாரணமாக கால எல்லையை பிற்போட முடியும். அதேபோன்று எமது கல்வித் தகுதிக்கு ஏற்ப சில பாடங்களை தவிர்ந்துகொள்ளவும் முடியும்.

* இலங்கைத் திறந்த பல்கலைக் கழகத்தின் தலைமையகம் நாவலயிலும் பிராந்திய நிலையங்கள் கொழும்பு, கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உட்பட 18 உப கற்கை நிலையங்களும் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட் டுள்ளன.

* சாதாரணமாக 10 ஆண்டுகள் கராஜ்ஜில் பணியாற்றிய அனுபவ முள்ள ஒருவர் பொறியியலாளராக கற்று வெளியேறுவதற்கான வாய்ப்பை திறந்த பல்கலைக்கழகம் வழங்குகின்றது.

* கடந்த 2 1/2 தசாப்தமாக தனது எதிர்பார்ப்புகளையும் இலக்குகளையும் முழுமையாக நிறைவேற்றிய கல்வி நிறுவனமாக திறந்த பல்கலைக்கழகம் கருதப்படுகின்றது. ஏனைய பல்கலைக்கழகங்கள் போன்று பகிடிவதை, மாணவர் குழுக்களுக்கிடையிலான வன்முறைகள் எதுவுமே இங்கு நிகழ்வதில்லை. மிக அமைதியான முறையில் ஆரோக்கியமான கல்விப் பணியை திறந்த பல்கலைக்கழகம் ஆற்றி வருகின்றது.

* தற்போது 30,000க்கும் மேற் பட்ட மாணவர்கள் பல்வேறு கற்கை நெறிகளை கற்று வருகின்றனர். தொழில் மையப் பாடங்களுக்கே இங்கு முன்னுரிமை வழங்கப்படு கின்றது. கல்விப் பீடம், மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞான பீடம், இயற்கை விஞ்ஞான பீடம், பொறியியல் தொழில்நுட்ப பீடங்கள் என்று நான்கு பிரதான பீடங்கள் இயங்கி வருகின்றன.

* இவற்றின் கீழ் 18 துறைகளும் 600க்கும் மேற்பட்ட கற்கைநெறிகளும் உள்ளன. சாதாரண டிப்ளோமா முதல் உயர் டிப்ளோமா, ஆரம்ப பட்டப்படிப்பு, பட்ட பின் டிப்ளோமா மற்றும் பட்ட பின் கற்கை என பல்வேறு தராதரங்களுடன் இயங்குகின்றது.

* ஆசிரியர் கல்வி, முன்பள்ளிக் கல்வி, மொழி, சட்டம், முகாமைத்துவம், இயற்கை விஞ்ஞானம், சுற்றாடல் கல்வி, தொடர்பாடல் என்பன முக்கிய பாடநெறிகளாக உள்ளன.

ஆகவே பல்கலைக்கழகம் அல்லது ஏனைய உயர்கல்வி நிலையங்களுக்கு நீங்கள் தேர்வாகவில்லை, அதனால் கல்வியில் உங்கள் எதிர்கால இலக்குகளை அடைய முடியவில்லை என்ற கவலையை விடுங்கள். ஏனைய உயர்கல்வி நிலையங்களினதும், பல்கலைக்கழகங்களினதும் தரத்திற்கு நிகரான, முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட திறந்த பல்கலைக்கழகத்தில் நீங்கள் உங்கள் உயர்கல்வியைத் தொடரலாம்.

Check Also

தரம் 10 கணிதம் அலகு 8. முக்கோணிகள் I

 முக்கோணியின் அகக் கோணம் என்றால் என்ன ? ஒரு முக்கோணிக்கு மூன்று அகக் கோணங்கள் இருக்கும் , இங்கே அவை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *