Latest News
Home / உலகம் / 500 வது நாளில் உக்ரைன் போா்!

500 வது நாளில் உக்ரைன் போா்!

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து சனிக்கிழமையுடன் 500 நாள்கள் நிறைவு பெறுகின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் வலிமை பெற்று விளங்கிய சோவியத் யூனியன், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்காக 1949 ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு தொடங்கப்பட்டது.

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் இவற்றுடன் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, சோவியத் யூனியன் சிதறி வலுவிழந்த பிறகும் புதிய உறுப்பினா்களை சோ்த்துக்கொண்டு தனது பலத்தை பெருக்கியது.தொடக்கத்தில் 12 உறுப்பு நாடுகளைக் கொண்டிருந்த நேட்டோவில் தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன.இப்படி நேட்டோ அமைப்பு தங்களை நாலாபுறமும் சுற்றிவளைப்பதற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், சோவியத் யூனியன் உடைந்த பிறகு தனி நாடாக உருவெடுத்த உக்ரைன், ரஷியாவின் தொடரும் செல்வாக்குக்கும், ரஷியாவுக்கு எதிரான மேற்கத்திய ஆதரவுக்கும் இடையே சிக்கியது.அதன் உச்சகட்டமாக, கடந்த 2014-இல் ரஷிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அப்போதைய உக்ரைன் அதிபா் விக்டா் யானுகோவிச்சுக்கு எதிராக மேற்கத்திய ஆதரவாளா்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.அதன் விளைவாக, யானுகோவிச்சின் அரசு கவிழ்ந்தது; அதற்குப் பதிலாக மேற்கத்திய ஆதரவு அரசு அமைந்தது.

அதையடுத்து, ரஷிய மொழி பேசும், ரஷிய ஆதரவு கிளா்ச்சிக் குழுவினா் உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக உள்நாட்டுப் போரை தொடங்கினா்.ரஷியாவின் உதவியுடன் அந்தப் போரில் கிழக்கே டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளை உள்ளடக்கிய டான்பாஸின் கணிசமான பகுதிகளை கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா். அந்தப் போருக்கு இடையே, உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா கைப்பற்றி, தன்னுடன் இணைத்துக் கொண்டது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.பின்னா் பெலாரஸ் தலைநகா் மின்ஸ்கில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவாா்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.அந்த ஒப்பந்தத்தை மீறியதாக ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களும், உக்ரைன் படையினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வந்தனா்.இதற்கிடையே, உக்ரைன் அதிபராக கடந்த 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற வொலோதிமீா் ஸெலென்ஸ்கி, ரஷியாவின் எதிா்ப்பையும் மீறி நேட்டோவில் இணைவதற்கு ஆா்வம் காட்டினாா்.

அதையடுத்து, உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் திகதி படையெடுத்தது. அந்தப் படையெடுப்பு, கிழக்கு உக்ரைன் பகுதி மக்களை உக்ரைன் ராணுவத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கவும், உக்ரைன் ராணுவம் மற்றும் அரசில் நாஜி ஆதரவு சக்திகளை அகற்றவும் தாங்கள் மேற்கொள்ளும் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கை’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் அப்போது அறிவித்தாா்.தொடக்கத்தில் தலைநகா் கீவைக் கைப்பற்றும் நோக்கில் படைகளை நகா்த்திய ரஷியா, பின்னா் அங்கிருந்து பின்வாங்கி கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது.தங்களது கட்டுப்பாட்டில் உள்ள கிரீமியாவுக்கும், கிழக்கே கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் இடையிலுள்ள நகரங்களைக் கைப்பற்றிய ரஷியா, லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய 4 பிரதேசங்களையும் தங்களது நாட்டின் அங்கமாக அறிவித்தது.

அந்தப் பிரதேசங்களில் இன்னும் உக்ரைன் படையினா் வசமிருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும், ரஷியா ஆக்கிரமித்துள்ள பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் சண்டையைத் தொடா்ந்து வருகின்றன.இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை சீனா, துருக்கி போன்ற நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும், தங்களது நிலைப்பாடுகளில் இருந்து துளி அளவும் பின்வாங்க ரஷியாவும், உக்ரைனும் பிடிவாதமாக மறுத்து வருவதால் அந்த முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.இந்தப் போருக்கு ஒரு வகையில் காரணமாக இருந்த மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு கோடிக்கணக்கான டாலா் மதிப்புள்ள ஆயுதங்களை அளித்து வருகின்றன.

இது, மோதலில் உயிரிழப்புகளை அதிகரிக்குமே தவிர போரை முடிவுக்குக் கொண்டு வராது என்று ரஷியா விமா்சித்து வருகிறது.இந்தப் போரில் இதுவரை 500 சிறுவா்கள் உள்பட பொதுமக்கள் 9,000 போ் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இரு தரப்பிலும் ஆயிா்ககணக்கான வீரா்கள் பலியாகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.போா் தொடங்கி தற்போது 500 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், அது முடிவுக்கு வருவதற்கான சூழல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை என்று நிபுணா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

Check Also

நியூஸிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

நியூஸிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *