Latest News
Home / இலங்கை / வாழ்விலும் சாவிலும் இணைந்தே இருப்போம்-இடிமின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட தம்பதிகளின் மரணம் – கிராமமே சோகமயம்

வாழ்விலும் சாவிலும் இணைந்தே இருப்போம்-இடிமின்னல் தாக்கத்தினால் ஏற்பட்ட தம்பதிகளின் மரணம் – கிராமமே சோகமயம்

வி.சுகிர்தகுமார் 

  வாழ்விலும் சாவிலும் இணைந்தே இருப்போம் என சொல்வதை நாம் அறிந்துள்ளோம். ஆனால் அதனை நிஜமாக்கி பெருந்துயரத்தை ஏற்படுத்தியுள்ளனர் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த தம்பதிகள்.

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாமம் வயல் பிரதேசத்தில் நேற்று மாலை பெய்த மழையின் போதான இடிமின்னல் தாக்கத்தினால் பாதுகாப்பிற்காக வேப்பை மரத்தின கீழ் அடைக்கலம் புகுந்த தம்பதிகளின் மரணமே இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் விநாயகபுரம் 2 ஜ சேர்ந்த  46 வயதினை உடைய யோ.யோகேஸ்வரன் மற்றும் 46 வயதுடைய அவரது மனைவி கா.ஜெயசுதா ஆகிய 3 பிள்ளைகளின் பெற்றோர் இடிமின்னல் தாக்கத்தில் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இச்சம்பவம் விநாயபுரத்தில் இடிமின்னல் தாக்கம் தொடர்பில் பாரிய அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன் கிராமத்தினையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது  குறித்த கணவன் மனைவி மகள் மகன் உட்பட உறவினர்கள் 7பேர் நேற்று சாகாமத்தில் அமைந்துள்ள மேட்டு;நில பிரதேசத்தில்; கச்சான் செய்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது நேற்று மாலை அளவில் மழையின் அளவு அதிகரிக்க கச்சான் செய்கையில் ஈடுபட்ட கணவன் மனைவி தவிர்ந்த ஏனைய ஜவரும் அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளனர். இந்நிலையில் குறித்த கணவன் மனைவி இருவரும் வேலையை முடித்து விட்டு வெளியேற எத்தணித்த வேளையில் மழை அதிகரிக்க அருகில் இருந்த வேப்பை மரத்தின் கீழ் தஞ்சம் புகுந்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் அங்கு விழுந்த இடிமின்னல் தாக்கத்தில் அகப்பட்டு இருவரும் அவ்விடத்திலேயே பலியாகினர்.

சம்பவத்தில் மரணித்த பெண் அணிந்திருந்த தாலி கொடியிலே மின்னல் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கொடி கருகியுள்ளதுடன் பெண்ணும் கழுத்துப்பகுதியும் அதிக தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க ஒரு பெண் பிள்ளை உட்பட மூன்று பிள்ளைகளும் இன்று தாய் தந்தையை ஒரே நேரத்தில் இழந்து நிற்கும் நிலை மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன் குறித்த குடும்பத்தின் மீது அரசும் தனியார் அமைப்புக்களும் கவனம் செலுத்தி பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்கு ஆக்க பூர்வமான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இச்சம்பவத்தின் மூலம் மழை மற்றும் இடிமின்னல் காலத்தில் மக்கள் எவ்வாறு பாதுகாப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் தீடீர் மரண விசாரணை அதிகாரியும் நேரில் சென்று சம்பவ இடத்தினையும் திருக்கோவில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தினையும் பார்வையிட்டதன் பிற்பாடு உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சடலத்தை பொலிசாரின் அனுமதியுடன் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *