Latest News
Home / இலங்கை / இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவு

இலங்கையில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவு

2015 ஆம் ஆண்டளவில் நாட்டில் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆண்களின் எண்ணிக்கை 15 வீதத்தில் இருந்து தற்போது 9.1 வீதம் வரை குறைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் புகையிலை மற்றும் மதுபானப் பாவனையை குறைப்பதற்காக, புகையிலைக்கான புதிய வரி சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புகையிலை பாவனையால் உலகில் நாளொன்றிற்கு 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கின்றனர். அவர்களில் 7 மில்லியனுக்கும் அதிகமானோர் தொடர்ச்சியாக நாள்தோறும் புகைப்பிடிப்பவர்கள். மற்றும் சுமார் 1.2 மில்லியன் பேர் தொடர்ச்சியாக புகைபிடிக்காதவர்கள் என்றும் அவர் கூறினார். உலகில் அதிகளவிலான மக்கள் மரணமடையும் ஒரே நுகர்வோர் பொருளாக சிகரெட்டை அடையாளங் காண முடியும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன், புகைபிடிப்பதால் இலங்கையில் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழக்கின்றனர். புதிய கொவிட் தொற்றை விடவும் இது மிகவும் ஆபத்தான நிலை..

புகையிலை பாவனையிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்க்ஷ, 2006 ஆம் ஆண்டு இதற்கான முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, நாட்டில் புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை அமைக்கப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் புகையிலை உற்பத்திக்கான தற்போதைய வரிவிதிப்பு அமைப்பு முறைசாரானது மற்றும் சிக்கலானது. புகையிலைக்கான சரியான வரிவிதிப்பு சூத்திரத்தை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அதிகாரசபையானது, 2020 ஆம் ஆண்டில் ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளது.

இதன்படி, வரி விதிப்பு சூத்திரம் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் சிகரெட்டுகளுக்கான புதிய வரி மற்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வரிவிதிப்பு தொடர்பான இந்தப் புதிய தொகுதியை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் புகைப்பிடிப்பதில் ஈடுபடுவதைக் குறைக்க முடியும். மேலும், புகைபிடிப்பதினால் ஏற்படும் சுகாதார கேடுகளை குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை கட்டியெழுப்புவதுடன், அரசாங்க வருமானத்தையும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *