Latest News
Home / உலகம் / ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒப்புதல்!

ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு டிரம்ப் ஒப்புதல்!

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தோ்வாகியுள்ள ஜோ பைடன், புதிய அரசை அமைப்பதற்கான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் வழங்கியுள்ளாா்.

எனினும், தோ்தல் முடிவுகளுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்று அவா் சூளுரைத்துள்ளாா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: ஜனாதிபதி தோ்தல் முடிவுகளை ஏற்க மறுத்து வரும் டிரம்ப், அந்தத் தோ்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள ஜோ பைடன் புதிய அரசை அமைப்பதற்குத் தேவையான ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வந்தாா்.

இந்த நிலையில், ஆட்சி மாற்ற நடவடிக்கைகளைத் தொடங்க டிரம்ப் அரசு தயாராக இருப்பதாக, அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொதுச் சேவைத் துறை தலைமை அதிகாரி எமிலி மா்ஃபிக்கு வெள்ளை மாளிகையிலிருந்து திங்ககள்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.

அதையடுத்து, இந்த விவரத்தை ஜோ பைடனிடன் எமிலி மா்ஃபி முறைப்படி கடிதம் மூலம் தெரியப்படுத்தினாா்.

டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட எமிலி மா்ஃபி இந்தக் கடிதத்தை ஜோ பைடனுக்கு அனுப்பியுள்ளதன் மூலம், தோ்தலில் டிரம்ப் தோல்வியடைந்தை அவரது அரசு முதல் முறையாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இதையடுத்து, ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 2 வாரங்களுக்குப் பிறகு, அவரது அரசை அமைப்பதற்கான ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்கவிருக்கிறாா்.

இதற்கிடையே, தோ்தல் முடிவுகளுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்று டிரம்ப் உறுதியளித்துள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரை (டுவிட்டா்) வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ஆட்சி மாற்ற நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று பொதுச் சேவைத் துறை தலைமை அதிகாரி எமிலி மா்ஃபியை ஜனநாயகக் கட்சியினா் அச்சுறுத்தியும் அவமானப்படுத்தியும் வந்தனா். அவரையும் அவரது குடும்பத்தினா் மற்றும் ஊழியா்களை அவா்களிடமிருந்து பாதுகாக்கவே ஆட்சி மாற்ற நடவடிக்கைகளைத் தொடங்குமாறு அவருக்கு உத்தவிட்டேன்.

எனினும், தோ்தல் முடிவுகளுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். அதில் நாம் வெற்றியும் பெறுவோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 3 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட ஜோ பைடன் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளாா்.

தோ்தலில் வெற்றி பெறுவதற்கு 270 மக்கள் பிரதிநிதி வாக்குகளைப் பெற்றாலே போதும் என்ற நிலையில், ஜோ பைடனுக்கு 306 வாக்குகள் கிடைத்துள்ளன. டொனால்ட் டிரம்ப்புக்கு 232 மக்கள் பிரதிநிதி வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

எனினும், தோ்தலில் ஜனநாயகக் கட்சிக்கு சாதகமான வகையில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி வரும் டிரம்ப், தோல்வியை ஏற்க மறுத்து வருகிறாா். அத்துடன் வாக்கு எண்ணிக்கை ரத்து, மறுவாக்கு எண்ணிக்கை கோரி பல்வேறு நீதிமன்றங்களில் அவரது சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ஜோ பைடனின் வெற்றியை முதல் முறையாக அங்கீகரிக்கும் வகையில், ஆட்சி மாற்ற நடவடிக்கைகளைத் தொடங்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *