Latest News
Home / இலங்கை / அம்பாரை மாவட்டத்திலும் 04 மணிவரை 62.4 வீதமான வாக்களிப்பு!

அம்பாரை மாவட்டத்திலும் 04 மணிவரை 62.4 வீதமான வாக்களிப்பு!

வி.சுகிர்தகுமார்

9ஆவது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு அம்பாரை மாவட்டத்திலும் இன்று காலை 7 முதல் ஆரம்பமாகி அமைதியான முறையில் நடைபெற்றது.

இந்நிலையில் காலை 04 மணிவரை 62.4 வீதமான வாக்களிப்பு நடைபெற்றதாக அம்பாரை மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் வி.ஜெகதீசன் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தில் பல அரசியல் தலைவர்களும் இன்று வாக்கினை பதிவு செய்தனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அக்கரைப்பற்று இராமகிருஸ்ண வித்தியாலயத்தில் அமைந்திருந்த வாக்கு சாவடியிலும் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அக்கரைப்பற்று அஸ் சிறாஜ் மகாவித்தியாலய வாக்கு சாவடியிலும் வாக்களித்தனர்.

இதேநேரம் கடந்த கால தேர்தல்களோடு ஒப்பிடுகையில் வழமைக்கு மாறாக காலை முதல் வாக்காளர்கள் வாக்களிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்க முடிந்தது.

வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பான சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.  இதனை சுகாதார துறையினரும் பார்வையிட்டு வந்த நிலையில் இந்நடவடிக்கையினால் வாக்களிப்பதில் தாமதங்களும் ஏற்பட்டன.

அம்பாரை மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்;.எல்.பண்டாரநாயக்கவின் பணிப்புரையில் தேர்தல் நடவடிக்கை சிறப்பாக முன்னெடுக்கப்பட்டன.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் முன்னொருபோதும் இல்லாதவாறு பொதுத்தேர்தல் களம் சூடு பிடித்திருந்த நிலையில்  மாவட்டத்தின் பல பரதேசங்களில்  அமைதியான சூழ்நிலை காணப்பட்டபோதிலும் சில பிரதேசங்களில் சிறிய அசம்பாவிதங்களும் இடம்பெற்றன.

கல்முனை மற்றும் சாய்ந்தமருது உள்ளிட்ட சில பிரதேசங்களில் சிறிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட கபே அமைப்பு தெரிவித்தது.

நான்கு தேர்தல் தொகுதியை உள்ளடக்கிய திகாமடுல்ல தேர்தல் மாவட்டமாக அமைந்துள்ள அம்பாரை மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டின் சனத்தொகை புள்ளிவிபர கணக்கெடுப்பின்படி இம்முறை 513979 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இதில் அம்பாரை தொகுதியிலிருந்து 177144 வாக்களர்களும்
பொத்துவில் தொகுதியிலிருந்து 168793 வாக்களர்களும்
சம்மாந்துறை தொகுதியிலிருந்து 90405 வாக்களர்களும்
கல்முனை தொகுதியிலிருந்து 77637 வாக்களர்களும்
பதிவு செய்யப்பட்டு வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

மாவட்டத்திலிருந்து மொத்தமாக 7 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில்  ஒருபோதும் இல்லாதவாறு தேர்தல் களத்தில் 20 பதிவு செய்யப்பட்ட கட்சிகளும் 34 சுயேற்சை குழுக்களுமாக 540 வேட்பாளர்கள் களத்தில் குதித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்ட முடிகின்றது.

இதேநேரம் வாக்களிப்பதற்காக 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் 2000 பொலிசார் பாதுகாப்பு கடமையிலும் 6400 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையிலும் ஈடுபடுத்தப்பட்டதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் டி.எம்;.எல்.பண்டாரநாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கமைவாக பாதுகாப்பு தரப்பினர் தங்களது பணிகளை பக்கசார்புகளின்றி சிறப்பாக முன்னெடுத்தனர்.

இந்நிலையில் பெப்ரல் மற்றும் கபே உள்ளிட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களும் கடமையில் ஈடுபட்ட நிலையில் வாக்களிக்கின்ற மக்களின் சுகாதார பாதுகாப்பு கருதி சுகாதார துறையினரின் ஒத்துழைப்போடு வாக்களிப்பு நிலையங்களில் தொற்று நீக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *