Latest News
Home / இலங்கை / அதாவுல்லாவை அமைச்சராக்குவதே கருணாவின் இலக்கு: மு.பா.உ. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன்

அதாவுல்லாவை அமைச்சராக்குவதே கருணாவின் இலக்கு: மு.பா.உ. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன்

வி.சுகிர்தகுமார் 

  அமைச்சர் ஒருவரினால் செய்ய முடியாத அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அம்பாரை மாவட்டத்தில் முன்னெடுத்துள்ளேன். இதற்கமைவாக சுமார் 1800 மில்லியன் ரூபா நிதிக்கான அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை மேற்கொண்டேன் என  அம்பாரை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கோளாவில் காந்தி விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினதும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரதும் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இடம்பெற்ற பரப்புரை கூட்டமொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கடந்த காலத்தில் எமது மக்களின் உரிமை மற்றும் அபிவிருத்தி சார்ந்த பிரச்சினை தொடர்பில் 78 தடவைகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளேன். இதேநேரம் அபிவிருத்தி என்கின்ற விடயத்தையும் சரியாக முன்னெடுத்துள்ளேன்.

இதனை விட எதிர்வரும் காலத்தில் அதிகளவான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இந்த மண்ணின் மகத்துவத்தினை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்படும். அதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்றார்.

கடந்த 22 வருடங்களாக அமைச்சராக இருந்த அதாவுல்லா அவர்கள் மேற்கொண்ட அபிவிருத்தியோடு 4 வருடங்களே பாராளுமன்ற உறுப்பினராக இருந்து நான் மேற்கொண்ட அபிவிருத்தியை ஒப்பிட்டு பாருங்கள். அவர் ஒரு கிராமத்தைதான் அபிவிருத்தி செய்தார். ஆனால் நான் மாவட்டத்தில் உள்ள 52 கிராமங்களுக்கும் அபிவிருத்தி திட்டத்தை வழங்கியுள்ளேன்.

அத்தோடு எதிர்காலத்தில் எமது பகுதியில் உள்ள களப்பினை வெட்டும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை பாதுகாப்பதற்கான விசேட திட்டத்தையும் முன்னெடுத்து மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்.

உரிமை சார்ந்த விடயங்களுக்கும் இருப்பு சார்ந்த விடயங்களுக்குமாக பாராளுமன்றத்தில் ஏனைய இடங்களிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டு மக்களுக்காக குரல் கொடுப்பவனாகவும் என்றும் தமிழர்களுக்காகவும் தமிழ்த்தேசியத்திற்காக குரல் கொடுப்பவனாகவும் போராட்ட வீரனாகவும் இருப்பேன் எனவும் கூறினார்.

இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் தமிழனின் இருப்பு என்பது கேள்விக்குறியாக மாறும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் உருவாகி வருகின்றது. இதற்காகவே பல கட்சிகள் பல வேடங்களாக மாவட்டத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். அவர்களது நோக்கமெல்லாம் மாவட்டத்தின் தமிழ் பிரதிநிதியை இல்லாமல் செய்வதே. அவ்வாறு இல்லாமல் செய்யும்போது தமிழர்களின் அடையாளம் பூர்வீகம் பொருளாதாரம் அபிவிருத்தி சார்ந்த விடயங்களில் பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில் எமது மக்கள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் சக்தி எமது கைகளில் இருந்து  நழுவி மாற்றான் இனத்திற்கு செல்லும் அபாய நிலை உருவாகும்.

ஆகவே தமிழ் மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு தமிழ் பிரதிநிதி இல்லாமல் போகும் நிலையில் அதற்கு பதிலாக முஸ்லிம் அல்லது சிங்கள பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் குறிப்பாக அதாவுல்லா போன்றவர்களே தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கப்படும் எனவும் அதனையே கருணா விரும்புவதாகவும் அதாவுல்லாவை அமைச்சராக்குவதே கருணாவின் இலக்கு எனவும் குறிப்பிட்டார்.

Check Also

அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்!

இன்று (02) நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *