Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான மகா கும்பாபிசேகம் 28ஆம் திகதி….

அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான மகா கும்பாபிசேகம் 28ஆம் திகதி….

வி.சுகிர்தகுமார்

அம்பாரை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் ஆலயங்களில் ஒன்றான அக்கரைப்பற்று பனங்காடு அருள்நிறை மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் தேவஸ்தான புனராவர்த்தன நவகுண்ட பஷ அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிசேக பெரும்சாந்தி குடமுழுக்கு பெருவிழா இம்மாதம் 28ஆம் திகதி காலை 6மணி தொடக்கம் 7.20 மணிவரையுள்ள சுக்கிலபட்சத்து தசமி திதியும் மூல நட்சத்திரமும் அமிர்த சித்தயோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் இடம்பெற இறைவன் திருவருள் கைகூடியுள்ளது.

24ஆம் திகதி அதிகாலை கருமாரம்ப கிரியைகளோடு ஆரம்பமாகும்  கும்பாபிசேக பெருவிழாவின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வானது
25ஆம் திகதி நண்பகல் 11.55 தொடக்கம் 26ஆம் திகதி 4மணிவரை இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து கிரியைகள் இடம்பெறுவதுடன் 28ஆம் திகதி காலை 6.00 மணிமுதல் 7.20 மணிவரையுள்ள சுபமகூர்த்தத்தில் வேதோத்திர பாராயணங்கள் முழுங்க மாதுமை அம்பிகா சமேத ஸ்ரீ பாசுபதேசுவரருக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு இடம்பெற்று பெரும்சாந்தி விழா நடைபெறும்.

ஆலய தலைவர் மா.இரகுநாதன் தலைமையில் இடம்பெறும் கும்பாபிசேக  கிரியைகள் யாவும் கும்பாபிசே பிரதிஸ்டா பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ பாலகுகேஸ்வர சிவாச்சாரியார் அவர்களின் தலைமையில் ஆலய பிரதமகுரு வித்தயாசாகரர் சிவஸ்ரீ புண்ணிய கிருஸ்ணகுதாரக்குருக்கள் மற்றும்  ஈசான சிவாச்சாரியார் கிரியாதிலகம் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக்குருக்கள் ஆகியோரின் வழிகாட்டலில் நடைபெறவுள்ளது.

ஈழ வளதிருநாட்டின் கிழக்கே மீன்பாடும் தேனாடாம் மட்டு நகருக்குத் தெற்கே அம்பாரை மாவட்டத்தில் அக்கரைப்பற்று நகரிலிருந்து இருமைல்களுக்கு அப்பால் சாகாமம் வீதியில் பனங்காடு என்னும் பெயரில் அழகிய கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தை சுற்றி வற்றாத ஜீவநதியாக தில்லைநதி வளைந்து பாய்கின்றது. செந்நெல் விளையும் செழிப்பு மிகு வயல் நிலங்கள் நிறைந்து விளங்குகின்றன.

கடல்,ஆறு, குளம் ஆகிய மூன்று நீர் நிலைகளும் முறையுற அமைந்து மேலும் இக்கிராமத்தை அழகூட்டுகின்றன. இத்தகைய இயற்கை எழில்கள் நிறைந்த இக்கிராமத்தில் கிழக்கே முதலும் முடிவும் இல்லா முழுமுதற் பெருமான்   ஸ்ரீ பாசுபதேசுவரர்  என்ற நாமத்தோடு அன்னை ஸ்ரீ மாதுமை அம்பாள் சகிதம் வீற்றிருந்து அருள் பாலித்தருளுகின்றார்.

இந்துமதம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. அவற்றுள் ஒன்றே சைவசமயம். சிவபெருமானை முழுமுதற் கடவுளாக கொண்டு வழிபடுகின்ற
சமயமே  சைவ சமயம். சைவம் சிவத்தோடு சம்மந்தமானது. அந்த வகையில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு பழம்பெரும் சிவ வழிபாட்டுத் தலம் பனங்காடு ஸ்ரீ பாசுhதேசுவரர் திருத்தலமேயாகும். இத்திருத்தலத்தின் தொன்மையையும் சிறப்பும் பற்றி  கர்ண பரம்பரைக்கதைகள் ஏராளம் உள. இருந்தபோதிலும் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட காலமிருந்து வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.

தில்லை நதி செழித்தோடி கிழக்கினிலே பாய
சிறிது கண்தூரமதில் சிந்து அலை வீச
மல்லலம் பறவைகளும் வந்து தினம் போகும்
வான்குருவி கூடு கட்டி மகிழ்ந்து கதைபேசும்
இல்லையென்று இரப் போர்க்கு இனிப் போதுமென்ன
ஏராளமாக நெல் எடுத்தளிக்கும் ஊராம்
தொல்லை வினை தீர்க்கு மெங்கள் சோம சுந்தரேசர்
சுகமளிக்க வந்த திருப் பனங்காட்டுரே!

பனங்காடு கிராமம் மிகப்பழமையானது. இற்றைக்கு பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ஜயனார் ஆலயம் அமைக்கப்பட்டு வழிபாடியற்றப்பட்டுள்ளது. தற்போது ஆலயத்திற்கு அருகில் உள்ள நெற்காணிகள் ஜயனார் வெளி எனவும், அருகில் உள்ள குளம் ஜயனார் குளம் எனவும் இன்றும் அழைக்கப்படுவதும் ஜயனார் வழிபாடுகள் நடைபெறுவதும் இதற்கு சான்று பகர்கின்றது. இவ்வழிபாடே காலப்போக்கில் சிவவழிபாடாக மாற்றம் பெற்றது என கூறுகின்றனர். அது எவ்வாறு என்பதை சற்று கவனிப்போம்.

இற்றைக்கு சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் முப்பெரும் சித்தர்கள் இலங்கைக்கு விஜயம் செய்தனர். அவர்களில் ஒருவரே காரைதீவில் சமாதியடைந்த சித்தானைக்குட்டி சித்தர். அவர் ஜயனார் வழிபாட்டின் நிமித்தம் இங்கு வந்தபோது விரலால் கோடிட்டு காட்டி இவ்விடத்தில் சிவத்தலம் அமையும் காலப்போக்கில் அது தென்கைலாயமாய் திகழும் என்று கூறியுள்ளார். இவரது கூற்றை செவிமடுத்த பெரியவர்கள் சிற்பாசாரியை அழைத்து நிலையம் எடுத்தபோது சித்தானைக்குட்டி சுவாமி திருவடிகளால் காட்டிய இடமும் சிற்பாசாரி காட்டிய இடமும் ஒன்றாய் இருப்பதைக் கண்டு அதிசயித்தனர்.

பல ஆண்டுகள் கழிந்த பின்னர் இக்கிராமத்தில் வாழ்கின்ற ஆறு குடிமக்களும் தங்களுக்குள்ளே குடிக்கு ஒருவரைத்தெரிவு செய்து ஆறு பேர் கொண்ட வண்ணக்குமார் சபை அமைப்பினை ஏற்படுத்தி வழிபட்டு வருகின்றனர். வருடத்திற்கு ஒருமுறை ஆறு குடிகளும் ஒரு திருவிழாவும் அனைவரும் சேர்ந்து ஒரு திருவிழாவுமாக ஏழு திருவிழாவினை செய்து வருகின்றனர். இங்கு சிவராத்திரி விரதம், கௌரி விரதம், கந்தசஸ்டி, திருவம்பாவை, திருவாதிரை விரதங்கள் சிறப்பாகவும் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பிரார்த்தனைகளும்  பூசைகளும் நடைபெற்று வருகின்றன.

அம்பாரை மாவட்டத்தில் அழகிய ஆலயங்கள் பல இருப்பினும் சிகரம்போல் அழகிய சிற்பக் கலையுடனான தட்சணாமூர்த்தி மற்றும் நடராஜர் உள்ளிட்ட அனைத்துப் பரிவார மூர்த்திகளுடனும் இருதள விமானங்களுடனும் விளங்கும் ஒரே சிவன் ஆலயம் எனும் பெருமையினையும் இவ்வாலயம் பெறுகின்றது. அத்தோடு பாசுபதேசுவரரின் நாமங்கொண்ட பாடசாலையும் ஆலயத்திற்கரிகல் அமைந்து கல்வியில் பெரும் பங்காற்றி பல அறிஞர்களை இக்கிராமத்தில் உருவாக்கி வருவதும் பாசுபதேசுவரரரின் திருவருள் என்றே கூறவேண்டும்.

இச்சிறப்புமிகு ஆலயத்தில் 2020ஆம் ஆண்டில் இடம்பெறும் கும்பாபிசேக பெருவிழாவில் அனைத்து பக்தர்களும் கலந்து அவனருள் பெற்றேகுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஆலய நிருவாகம் உள்ளிட்ட பொதுமக்கள்.

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *