பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் கருத்து,
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையக பெருந்தோட்ட மக்களுக்கென விசேடமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான முன்மொழிவுகளை நாம் வரவேற்கின்றோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது,
“நாட்டில் கடும் நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில், தான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி தீவிரமாக செயற்பட்டுவருகின்றார். பங்காளிக்கட்சி என்ற வகையில் நாமும் எமது திட்டங்களை முன்வைத்து ஆதரவு வழங்கி வருகின்றோம்.
இவ்வாறானதொரு பின்புலத்தில் அனைத்து தரப்புகளுக்கும் ஏதோவொரு வகையில் நிவாரணம் வழங்கும் வகையில் வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம்.
மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி இரு பல்கலைக்கழகங்கள் வரவுள்ளன.
அதேபோல நுவரெலியா மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி உட்பட பல நல்ல விடயங்களும் உள்ளன. எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அமைச்சரவையில் இருப்பதால் மலையகம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது. அவரது அமைச்சுக்கும் வழமையைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே, அமைச்சரின் கரங்களை பலப்படுத்துவோம். மலையக மறுமலர்ச்சி என்ற இலக்கை அடைய இணைந்து பயணிப்போம். ஏதேனும் திருத்தம் செய்யப்ப வேண்டிய இருப்பின் அந்த யோசனையையும் காங்கிரஸ் முன்வைக்கும்.” என்றார்.
இ.தொ.காவின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் கருத்து,
2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மலையகம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என்று இ.தொ.காவின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் தெரிவித்தார்.
வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், அதில் முன்மொழியப்பட்டுள்ள யோசனைகளை அமுல்படுத்துவதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
“இது தேர்தலை இலக்கு வைத்த பாதீடு என சிலர் விமர்சிக்கின்றனர். பாதீடு என்பது தேர்தல் விஞ்ஞாபனம் அல்ல. அதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். அந்தவகையில் நடைமுறைக்கு சாத்தியமான யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மலையகம், பெருந்தோட்டம் என விளிக்கப்பட்டு ஒதுக்கீடுகள் இடம்பெற்றுள்ளமை, எமது மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய ஆரம்பித்துள்ளனர் என்பதற்கு சான்றாகும். இதற்கான சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிவரும் அமைச்சர் ஜீவன் தொண்டமானை பாராட்ட வேண்டும்.” – என்றார்.
பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி கருத்து,
“கல்வி புரட்சி ஊடாகவும் மலையக சமூகமாற்றத்துக்காக நாம் பாடுபட்டுவருகின்றோம். இதனை அடுத்தக்கட்டம் நோக்கி கொண்டுசெல்ல இந்த பாதீடு வழிவகுத்துள்ளது.” – என்று பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
பாதீடு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு அப்பால், நாட்டை மீட்பதற்காக சிறந்த முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன எனவும் சுட்டிக்காட்டினார்.
“பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்மூலம் லயன் யுகத்துக்கு முடிவு கட்டுவதற்கான எமது பயணத்தின் அடுத்தக்கட்டம் ஆரம்பமாகியுள்ளது.
மத்திய மாகாணம் கல்வி மையமாக மாறுவதற்குரிய முன்மொழிவுகளும் உள்ளன. தொழில்நுட்பம்சார் அறிவை மேம்படுத்தக்கூடிய வாய்ப்பு எமது இளைஞர், யுவதிகளுக்கு கிடைக்கும். அதன்மூலம் சர்வதேச சந்தைக்குகூட எம்மவர்களால் இலகுவில் நுழையக்கூடியதாக இருக்கும்.
பாதீடு தயாரிக்கப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதியுடன் எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் எமது தரப்பு யோசனைகளையும் முன்வைத்திருந்தோம். அவற்றுக்கு சாதகமான பதில் கிட்டப்பட்டுள்ளது . மலையக அமைச்சர் ஒருவர் அமைச்சரவையில் இருப்பதால்தான் எமது குரல் அங்கும் ஒலிக்கின்றது. எனவே, மலையக மாற்றம் என்ற இலக்கை அடைய அமைச்சரவை பலப்படுத்துவோம்.” – என்றார்.
இ.தொ.காவின் பிரதி தேசிய அமைப்பாளர் (அரசியல் பிரிவு) கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் கருத்து,
மீண்டும் இருண்ட யுகம் நோக்கி செல்லாமல், எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கு ஏற்றவகையில் வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது – என்று இ.தொ.காவின் பிரதி தேசிய அமைப்பாளர் (அரசியல் பிரிவு) கொட்டகலை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
பாதீடு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் கூறியதாவது,
“பொருளாதார நெருக்கடியால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மலையக பகுதிகளிலும் இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.
நுவரெலியா மாவட்டத்தை மையப்படுத்தி இரு பல்கலைக்கழகங்கள், கண்டியில் தொழில்நுட்ப கல்லூரி என கல்விசார் விடயங்களும் வரவுள்ளன. இவற்றை எமது மலையக இளைஞர், யுவதிகள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல் வேலை வாய்ப்புகளுக்கான சாத்தியமும் உள்ளது.
எமது மக்கள் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குளை அளித்து ஜீவன் தொண்டமானை நாடாளுமன்றம் அனுப்பியதால், அவர் அமைச்சரவைக்கும் சென்றார். அவரின் சேவைகளை பார்த்துதான், அமைச்சுக்கு வழமையைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சொல் அல்ல செயல் என்பதே முக்கியம் என்ற வழியில் பயணிக்கும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், பல சிறந்த திட்டங்களை முன்வைக்கவுள்ளார். எமது அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் எமது மக்கள் சார்பில் நன்றிகள்.” – என்றார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவருமான கணபதி கனகராஜ் கருத்து,
மலையக மக்களின் அபிவிருத்தியையும் மையப்படுத்திய சிறப்பான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களின் காணி உரிமை சம்பந்தமாக கடந்த காலங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. நாம் இருநூறு நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி இவ்விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவதாக உறுதியளித்திருந்தார்.
அந்த வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட பிரதேச மக்களுக்கு 10 பேர்ச் காணி வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது மலையக மக்களின் வரலாற்றில் மற்றுமொரு மைல் கல்லாகும்.
மலையகத்துக்கென தனியான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மலையக மாணவர்களின் கல்வித் தேவையை உணர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் தேசிய பல்கலைக்கழகம் ஒன்றிய அமைப்பதற்கு ஜனாதிபதியும்,நிதி அமைச்சர்மான ரணில் விக்ரமசிங்க நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தான் ஸ்ரீ பாத தேசிய கல்விக் கல்லூரி நிறுவப்பட்டது. அதன்மூலம் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை மலையகத்திலிருந்து உருவாக்குவதற்கு வாய்ப்பேற்பட்டது. அதேபோல மலையகத்துக்கான தேசிய பல்கலைக்கழகம் அவருடைய காலத்திலேயே அமைக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அதேபோல எதிர்வரும் வருடத்தில் மலையகத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் ரூபாய்களை ஜனாதிபதி ஒதுக்கீடு செய்துள்ளார். மிக அதிகமான உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படும் மலையக பிரதேசத்தில் அடுத்த ஆண்டு பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கிறோம்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து வருகிறது. எமது பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் எமது மக்கள் அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன் வைத்துள்ளார். அவற்றில் பல விடயங்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முற்று முழுதாக வரவேற்கிறது. எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சிதானந்தன் கருத்து,
மலையகத்தின் தேசிய பிரச்சினையாக மாறி இருந்த காணி விவகாரங்களுக்கு ஜனாதிபதி அவர்கள் நாலு பில்லியன் ஒதுக்கீடு செய்திருப்பதானது இலங்கை வரலாற்றில் சிறந்த வரவு செலவுத் திட்ட அறிக்கையாக பார்க்கப்படுகின்றது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற இந்த வரவு செலவு திட்ட அறிக்கை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இந்திய வம்சாவளி மக்களுக்கு கிடைத்த கௌரவமாக பார்க்கப்படுகிறது.
அந்நிய செலவாணியை ஈட்டுக் தருவதில் இந்த நாட்டின் முதுகெலும்பாக பாடுபட்ட இந்திய வம்சாவளி மக்களுக்கு இதுவரை காலமும் வந்த ஆட்சியாளர்கள் யாரும் இவ்வளவு பெரிய தொகையை தங்களது அபிவிருத்திக் என வழங்கியதில்லை அந்த வகையில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டுக்குரியவர்.
அதேபோல் மலையக மக்களின் கனவாக இருக்கின்ற எமது அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பிரதான கோரிக்கையாக அமைந்த பல்கலைக்கழக கனவுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதானது கல்வித்துறையின் மேம்பாடு ஜனாதிபதியின் உயரிய எண்ணத்தையும் பிரதிபலிக்கின்றது.
இதுவரை காலமும் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது மலையக மக்களுக்கு நன்மை தருகின்ற அதேவேளை வாழ்க்கை தரத்தை மாற்றி அமைக்கின்ற ஒரு வரவு செலவு திட்டமாக பார்க்கப்படுகின்றது.
மலையக மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இம்முறை பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படாத நிலையில் எதிர்வரும் ஆண்டில் ஆரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கான நிதி ஒதுக்கீடு மலையக மக்களை மிகப்பெரிய ஆறுதல் பெருமூச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.
அண்மையில் நடந்த நாம் இருநூறு என்ற மலையக மக்களின் 200 ஆண்டு கால வரலாற்றை பிரதிபலிக்கின்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் அங்கு உரையாற்றிய பொழுது மலையக மக்கள் ஜனாதிபதி மீது எவ்வளவு பெரிய நம்பிக்கை வைத்திருகிறார்கள் என்பதை புரிந்து கொண்டிருப்பார் ஆகவே இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரவு செலவு திட்டத்தை எந்தவிதமான பேதம் பாராது அனேக மக்களின் முன்னேற்றத்துக்காக சகலரும் ஆதரிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சிதானந்தன் தெரிவித்தார் இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலமாக பின்னடைந்து கிடக்கின்ற விரித்து திட்டங்கள் சகிதம் மலையக மக்களின் பிரதான இலக்குகளை அடைவதற்கு பாலமாக அமையும் என தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இ.தொ.கா அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் கருத்து,
எமது சமூகம் 200 வருடங்களாக காணி உரிமையற்ற சமூகமாக காணப்படுவதாக இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த தற்போதைய எதிர்க்கட்சியினர் அடையாளப்படுத்திய போதிலும், இம்முறை வரவு செலவு திட்டத்தில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எமது சமூகத்தினருக்கு 10 பேர்ச் காணி உரிமையானது உள்வாங்கப்பட்டுள்ளது.
எமது காணி உரிமை தொடர்பான யோசனையானது ஒரு வரவு செலவுத் திட்டத்திலேயே உள்வாங்கப்பட்டமை இதுவே முதல் தடவை எனவும், அதனை அமுல்படுத்தும் வகையில் 4 பில்லியன் நிதி ஒதுக்கீட்டினைப் பெற்றுக் கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு இரத்தினபுரி மாவட்ட மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், அவர் மேலும் கூறுகையில்,
இதுவரைக் காலமும் மத்திய மாகாணத்தை மாத்திரம் மையப்படுத்தி “மலையக அபிவிருத்தி” என்பதற்கு அப்பாற் சென்று, இம்முறை இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, கொழும்பு, மாத்தரை, காலி, களுத்துறை, குருநாகல், பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வாழும் எமது சமூகத்தின் மேம்பாட்டுக்காக முன்மொழியப்பட்டுள்ள பாதீட்டின்போது 10 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளமையானது, இந்த அரசாங்கம் எவ்வளவு தூரம் எமது இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு முன்னுரிமையளிக்கிறது என்பதனை பறைசாற்றுகிறது.
அதேவேளை, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான பத்தாயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு, மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழக முன்மொழிவு, பாடசாலை இடை விலகிய மலையக இளைஞர்களுக்கான தொழில்நுட்ப கல்வியை விருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்கள் என பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய வரவு செலவு திட்டமாக இதனை நாம் கருதுகிறோம்.
மலையக சமூகத்தின் வளர்ச்சிக்காக முன்னெடுக்கும் எந்த ஒரு நல்ல வேலைத்திட்டத்திற்கும் எமது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு என்றென்றும் வழங்கும் என்பதே வரலாறு. அந்த வகையில், இந்த வரவு செலவு திட்டத்திற்கு எமது மலையக சமுதாயத்திற்கு பல அனுகூலங்களை உள்ளடக்கியவாறு அமைவதற்கு பாராளுமன்றத்திற்குள் காரணமாக இருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய மருதபாண்டி ராமேஸ்வரன் எமது இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
இ.தொ.காவின் இளைஞர் அணி செயலாளர் ரமேஸ்குமார் சுப்ரமணியம் கருத்து,
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் தைரியமாக கடினமான சவால்களுக்கு முகங்கொடுத்த ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க அவர்களினால் அனைத்து சமூகத்தினருக்கும் ஏற்ற வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளது. என்று இ.தொ.கா வின் இளைஞர் அணி செயலாளர் ரமேஸ்குமார் சுப்ரமணியம் தெிரிவித்துள்ளார்.
நாட்டில் பல தடவைகள் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டிருக்கலாம். அவை ஒவ்வொன்றும் பல விமர்சனங்களையும் பல மாற்றங்களையும் ஏற்படுத்தியிருக்கும் எனவும்.
குறிப்பாக இந்திய வம்சாவளி மக்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடங்கள் கடந்ததை கௌரவிக்கும் வகையில் “நாம்200” எனும் தேசிய நிகழ்வை அரசு நடாத்தியிருந்ததோடு அந்நிகழ்வில் ஜனாதிபதி மலையக மக்களுக்கான நில உரிமை தொடர்பில் தனது நிலைப்பாட்டையும் தெளிவுப்படுத்தியிருந்தாகவும்.
2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டமானது எம் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கான காணி உரிமைக்கான நிதி ஒதுக்கீடு, நுவரெலியாவில் பல்கலைக்கழகம் மற்றும் உயர்தரம் சித்தியடைந்த அனைவருக்கும் பல்கலைக்கழக கல்வியை தொடர வாய்ப்பு போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு குறிப்பாக கல்வியினால் மாபெரும் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராகின்றதாகவும்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் விஷேட அபிவிருத்தி திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படுள்ளமையினால் எம் இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்புகளும் அதிகரிக்கப்படும். காலத்திற்கு ஏற்ற இந்த வரவுசெலவு திட்டத்தினை முன்வைத்த ஜனாதிபதி மற்றும் பெருந்தோட்ட மக்களின் பிரதிநிதியாக அமைச்சரவையில் மக்களின் தேவைகளினை வெளிப்படுத்திய அமைச்சர் ஜீவன் தொன்டமானுக்கும் பெருந்தோட்ட மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.