Latest News
Home / இலங்கை / ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும் ஈஸ்டர் தாக்குதல் விசாரணை மூடிமறைக்கப்பட்டது எப்படி ? அம்பலப்படுத்திய முன்னாள் பொலிஸ் உயரதிகாரி

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம்சாட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேர் கொல்லப்பட்ட அதேநேரம் சுமார் 500 பேர் காயமடைந்தனர்.

தேசிய பாதுகாப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களை உளவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் சந்தித்தார் என அசாத் மௌலானா சனல் 4 க்கு தெரிவித்த கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை தடம் புரண்டமைக்கு அரசியல் தலையீடே காரணம் என முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன அவுஸ்ரேலியாவின் ABC ஊடகத்திற்கு அம்பலப்படுத்தியுள்ளார்.

குண்டுவெடிப்பு நடந்து 6 மாதங்களுக்குப் பிறகு ராஜபக்ச பதவியேற்றதும் அவரது தரப்பினர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகவும் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அந்த நேரத்தில், ஒரு பிரதமரோ அல்லது அமைச்சரவை கூட நியமிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து வந்த மாதங்களில், மேலும் 22 அதிகாரிகள் விசாரணையில் இருந்து நீக்கப்பட்டனர் என்றும் தனது கட்டளையின் கீழ் இருந்த 700க்கும் மேற்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் அரசாங்கம் விதித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ ஆட்சியின் சகாக்களை விசாரிக்கும் பொலிஸாரை அச்சுறுத்தும் முயற்சியாக இதனை தான் பார்த்ததாகவும் இது மிகவும் சட்டவிரோதமானது என்றும் இந்த நடவடிக்கையால், பல அதிகாரிகள் அச்சப்பட்டதாகவும் சிலர் இனி அங்கு பணிபுரிய விரும்பாமால் இடமாற்றம் கோரியதாகவும் கூறியுள்ளார்.

சில உளவுத்துறை அதிகாரிகள் முஸ்லிம் குழுவுடன் தொடர்பு வைத்திருந்தனர் என்றும் அதனை கண்டுபிடித்த போது அவர்களுக்கு தடை போடப்பட்டது என்றும் இவற்றில் ஒன்று அமெரிக்க பெடரல் பீரோ ஒப் இன்வெஸ்டிகேஷன் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்த அன்று காலை தற்கொலை குண்டுதாரி ஒருவரின் வீட்டிற்கு இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சென்றதாகவும் ஆனால் இந்த தகவலை பொலிஸாரிடம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அத்தகைய சந்தர்ப்பங்களில், சில தனிநபர்கள் மற்றும் குழுக்களை கேள்வி கேட்க முயன்றபோது, சில தடைகளை தாம் எதிர்கொண்டதாகவும் த்ற்கொலை குண்டுதாரிகளின் சகாக்களை விசாரணை செய்வதற்கு தாம் இரண்டு முறை தடுக்கப்பட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உளவுத்துறை தொடர்பான இரகசிய விடயங்கள் என இராணுவ உளவுத்துறை தமக்கு தெரிவித்ததால், அவர்களை தாம் மேலும் விசாரிக்கவில்லை என்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க முடியும் என்று தான் நம்பிய முந்தைய விசாரணையை இராணுவ புலனாய்வு முறியடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர், கிழக்கில் இரண்டு கான்ஸ்டபிள்களின் கொலையில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் பங்கை மறைத்து, இராணுவ புலனாய்வுப் பிரிவினர் பொலிஸாருக்கு தவறான தகவல்களை வழங்கியிருந்தனர் என்றும் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கொலைச் சந்தேக நபர்களை கண்டுபிடிக்க முடிந்திருந்தால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன என்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Check Also

வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி 35 சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானம்

வட்டுகோட்டைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்தார் என்று கூறப்படும் சம்பவம் பெரும் கொந்தளிப்பை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *