பிரதமர் மோடியின் 70ஆவது பிறந்தநாள் – அரச தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலர் ருவிட்டரில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர்.

அதேநேரம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி உள்ளிட்ட உலக தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘பிறந்த நாளான இந்த புனித நாளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம்’ என்று கூறியுள்ளார்.

அதேவேளை, பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க. சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14ஆம் திகதி தொடங்கிய இந்த சேவை வாரம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பா.ஜ.க. தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அத்தோடு, நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் கேக் வெட்டியும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் பிரதமரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.